உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் அனயாபட் பிசிட் பிரீசாசக்கை எதிர்கொண்டார். 28 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தன்வி ஷர்மா 7-15, 12-15 என்ற நேர் செட்டில் அனயாபட்டிடம் தோல்வியை தழுவினார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
உலக ஜூனியர் பேட்மிண்டனில் 17 ஆண்டுக்கு பிறகு பதக்கத்தை ருசித்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பை தன்வி பெற்றார். இதற்கு முன்பு சாய்னா நேவால் (2006-ம் ஆண்டில் வெள்ளி, 2008-ம் ஆண்டில் தங்கம்), அபர்ணா (1996-ம் ஆண்டில் வெள்ளி) ஆகிய இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றிருந்தனர். 16 வயதான தன்வி பஞ்சாப்பை சேர்ந்தவர்.
maalaimalar

