நடப்பு உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக சம்பியன் என வரலாற்றில் தனது பெயரை அவர் பதித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 57 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்து நாட்டின் ஜூலியா ஷரமெத்தாவை வீழ்த்தினார் ஜாஸ்மின்.
இந்திய நேரப்படி நேற்று முன்தினம் (13) இரவு நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் ஜாஸ்மின் வெற்றி பெற்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் பட்டம் வென்ற 9ஆவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இறுதி சுற்றுக்கு பிறகு ஜாஸ்மின் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். அந்த அறிவிப்பை ரிங்கில் இருந்த அவர் ஆர்ப்பரித்து கொண்டாடினார். பின்னர் தன்னுடன் விளையாடிய ஜூலியாவை அரவணைத்ததார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜாஸ்மினுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதற்கு முன்னர் மேரி கோம், நிகத் ஜரீன், சரிதா தேவி, ஜென்னி ஆர்எல், லேகா, நீது, லவ்லினா, சாவிட்டி ஆகியோர் உலக சம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.