உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 267 ட்ரோன்களை ஏவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உக்ரைன் விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் யுரி இக்னட் கூறுகையில்,
“ரஷ்யா ஏவிய 267 ட்ரோன்களில் 138 ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்துவிட்டதாகவும், 119 ட்ரோன்கள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மாயமாகி விட்டன ” எனவும் கூறினார்.
ஆனால், எஞ்சிய 10 ட்ரோன்களின் நிலை குறித்து அவர் விளக்கவில்லை. மேலும், கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அவை தாக்கியதாக ஆயுதப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ட்ரோன்களோடு, 3 நெடுந்தொலை ஏவுகணைத் தாக்குதலையும் ரஷ்யா நடத்தியுள்ளதாகவும், அதில், உக்ரைனின் 5 பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியதாவது,
“ஒரே இரவில் 200க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குலில் ரஷ்யா ஈடுபட்டது. ரஷ்யாவின் இந்த வான்வழித் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைனுக்கு ஆதரவாக கூட்டணி நாடுகள் துணை நிற்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.