டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலின் போது, கனேடிய தூதரக ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் இஸ்ரேல் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சனிக்கிழமை தெரிவித்தார்.
ஈரான் ஏவுகணைத் தாக்குதலின் போது தாக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்த கனேடிய தூதரக ஊழியருக்கு உதவியதற்காக இஸ்ரேல் தீயணைப்பு வீரர்களுக்கு அனிதா ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கட்டிடத்தில் இருந்த ஏனைய குடியிருப்பாளர்களுடன் மீட்கப்பட்டார், தற்போது அவர் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று வெளியுறவு அமைச்சர் சமூக ஊடக பதிவென்றின் மூலம் அறிவித்துள்ளார்.
அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதால், பதிலுக்கு சனிக்கிழமை பிற்பகல் இஸ்ரேல் மீது இரண்டாவது சுற்று ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இதில் இஸ்ரேலின் இராணுவ தலைமையக கட்டிடம் தாக்குதலுக்குள்ளானதாக தெரியவருகின்றது.
கடந்த இரண்டு நாட்களில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது மூத்த விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் கொல்லப்பட்டதாகவும், பல உயர்மட்ட இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஈரானின் ஐ.நா. தூதுவர் 78 பேர் கொல்லப்பட்டதாகவும் 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.