14.6 C
Scarborough

இலங்கையில் தமிழருக்கு பிரச்சினை – அரசாங்கத்துடன் இணைந்து தீர்வு தேட வேண்டும்!

Must read

தமிழ் மக்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதை தான் உணர்வதாகவும் இதற்கான தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் திருகோணமலை யுபிலி மண்டபத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இதனை தெரிவித்தார்.

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலரை திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் காணி அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள், போன்ற பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன.

குறிப்பாக யுத்தம் நிறைவுற்றதற்கு பின்னரான சூழ்நிலையிலும் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் நிழல் யுத்தம் ஒன்றுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். குறிப்பாக வட கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்படுகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வரைக்கும் இலங்கை அரசின் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டும் வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல்

தமிழ் பேசும் மக்களின் இருப்பை கேள்விக்கறியாக்கும் வகையில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் ஒரு இன அழிப்பு எனவும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை அவர்களிடத்தில் கையளித்து அவர்களின் குடியிருப்பு மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் வலியுறுத்தி இருந்தார்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாங்கள் இன்றுவரை 30 ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? தங்களால் கையளிக்கப்பட்ட உறவுகள் இன்னும் தங்களிடம் மீள வழங்கப்படவில்லை. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் விடையங்களுக்கு அரசாங்கத்துடன் ஈடுபட்டு வருகின்றோம் எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் வெளிப்படுத்தாதபடியால் இலங்கை அரசை தாங்கள் நம்ப தயார் இல்லை. இதனால் சர்வதேச அமைப்புகளையே தாங்கள் நம்பி இருப்பதாகவும் உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச நீதிப் பொறிமுறைதான் தங்களுக்குத் தேவை என்பதையும் தெரிவித்தனர்.

இலங்கையின் 30/1 தீர்மானத்தின்கீழ் வந்த 25 தீர்மானங்களை நிறைவேற்றவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், 46/1 ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்ட குழுவினர் இலங்கைக்கு வருவதற்கான வீசாவை அரசு வழங்க வேண்டும் இதன்மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்தித்து உண்மையான சம்பவங்களை பெற்றுக் கொண்டுசெல்ல வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக அதற்கான நீதியை வழங்க வேண்டும் எனவும் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் திட்டமானது 1948 இல் இருந்து இலங்கை தமிழருக்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் அன்று தொடக்கம் இன்று வரை ஆவணமாக்கப்பட்டு அறிக்கை இடப்பட வேண்டும். வட கிழக்கில் 40க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 21 புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த உடலங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுனர்களை இங்கே அழைத்து அவர்கள் கண்காணிப்பில் இந்த அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பல விடையங்களை கலந்து கொண்டவர்கள் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்கள்.

இதன்போது பதிலளித்த ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இந்த விடையங்கள் இலங்கையில் இருப்பதாக தான் உணர்வதாகவும், இதற்கான தீர்வினை இந்த தேசத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இருந்தாலும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தை இலங்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதோடு, நீதிப்பொறிமுறை சார்ந்த விடையங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது எனவும்.

அதேபோல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிப் பொறிமுறையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஜனாதிபதியை தான் சந்திப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article