இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய மனித உரிமைகள் ஆணையாளர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகத் தெரிவித்த வோல்கர் டர்க், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள்ளின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்பார்க்கிறது என்று ஆணையாளர் மேலும் கூறினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாக தெரிவித்தார்.
நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.