எதிர்வரும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விளையாடக்கூடாது என்று பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டின் ஆளும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனியா அன்டோனியாசியால் தயாரிக்கப்பட்ட கடிதம் ஒன்றில் 160க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்த தலிபான்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பேணி வருகின்றனர்.
அவர்களின் சுதந்திரம் முற்றாக நிராகரிக்கப்பட்டு விளையாட்டுத்துறையில் அவர்களது பங்களிப்பும் இல்லாது செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உரிமைகள் சார்ந்த மோசமான துஷ்பிரயோகங்கள் தொடர்பாகப் பொறுமைகாக்க முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடக்கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் தொடர்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சட் கோல்ட் பதிலளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள கோல்ட், அதன் காரணமாகவே இங்கிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நேரடி கிரிக்கெட் தொடர்களை ஒழுங்கு செய்வதில்லை என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் உறுப்பு நாடாகத் தனித்து நடவடிக்கை எடுப்பதை விட, சர்வதேச கிரிக்கெட் பேரவை போன்ற பாரிய அமைப்பு ரீதியாகச் செயற்படுவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் பிரித்தானியாவின் நிகல் ஃபராக் பிரபு மற்றும் ஜெரமி கோர்பின் பிரபு உள்ளிட்ட பிரபுக்கள் சபை உறுப்பினர்களும், ஹவுஸ் ஒஃப் கொமன்ஸ் உறுப்பினர்களும் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.