ஆசியக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் காயத்தினால் அவதிப்பட்டு வரும் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க பெயரிடப்பட்டுள்ளார்.
எனினும், அவரது உடற்தகுதியைப் பொறுத்து இறுதிப் பதினொருவர் அணியில் விளையாடுவது குறித்து தீர்மானிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் இம்முறை ஆசியக் கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்காக ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங், ஆப்கானிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 7 அணிகள் தங்களது குழாம்களை அறிவித்துள்ள நிலையில், 8ஆவது மற்றும் கடைசி அணியாக இலங்கை குழாமும் இன்று (28) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில், காயத்தினால் அவதிப்பட்டு வரும் வனிந்து ஹஸரங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவது உடற்தகுதியைப் பொறுத்தே இறுதிப் பதினொருவர் அணியில் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை, வனிந்து ஹஸரங்க காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து உடற்தகுதி பரிசோதனையில் தகுதி பெற முடியாவிட்டால், அவரது இடத்தில் துஷான் ஹேமந்த விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போது ஜிம்பாப்வேவுக்குச் சென்றுள்ள இலங்கை அணியில் வனிந்து இடம்பெறவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக துஷான் ஹேமந்த T20I அணிக்காக பெயரி;டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் போது கால் பின்புற தசையில் காயத்துக்குள்ளாகியிருந்தார்.
இதனிடையே, ஆசியக் கிண்ணத்துக்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களாக குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா ஆகியோரும், சகலதுறை வீரர்களாக தசுன் ஷானக, கமிந்து மெண்டிஸ் மற்றும் துனித் வெல்லாலகேவும், பந்துவீச்சில் துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷ பத்திரான, மஹீஷ் தீக்ஷன ஆகிய வீரர்கள் இ;டம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்ககெதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்காக பெயரிடப்பட்ட இலங்கை குழாத்தில் முதல் தடவையாக இடம்பிடித்த புதுமுக வீரர்களான நுவனிந்து பெர்னாண்டோ, விஷான் ஹெலம்பகே, கமில் மிஷார மற்றும் துஷான் ஹேமந்த ஆகிய நான்கு வீரர்களில் நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் கமில் மிஷார ஆகிய இருவருக்கு மாத்திரமே ஆசியக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்க தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேபோல, அண்மையில் நடைபெற்ற SLC T20 லீக் தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்ற சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்னவும் ஆசியக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
இது தவிர, ஜிம்பாப்வே அணிக்கெதிரான T20I தொடரில் இடம்பெறத் தவறிய தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் எஷான் மாலிங்க ஆகிய நால்வருக்கும் ஆசியக் கிண்ணத் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதேவேளை, இந்த ஆசியக் கிண்ணத்தில் B குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை செப்டம்பர் 13ஆம் திகதி அபுதாபியில் சந்திக்க உள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி விபரம்: சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷார, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார, மதீஷ பத்திரன