அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனின் இலண்டன் நகரில் இன்று (ஜூன் 9) நடைபெறவுள்ளது.
இந்த இரு பெரிய பொருளாதார பலமிக்க நாடுகள் இடையேயான வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உட்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார்.
இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இவ்வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு சென்றது. இதனால், உலகளாவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீன பிரதமர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினர். இதுதொடர்பாக ட்ரம்ப் கூறும்போது, “எங்களிடையேயான உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது” என்றார்.
இந்நிலையில், அமெரிக்க-சீன அதிகாரிகள் இலண்டனில் அடுத்த வாரம் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்.