பிரதமருக்கும் அகில இலங்கை சாசனாரக்ஷக பலமண்டலத்தின் தலைவர் பேராசிரியர் தும்புல்லே சீலக்கந்த தலைமைத் தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, பௌத்த அறநெறிப் பாடசாலைகள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் மேலதிக வகுப்புகளை நிறுத்துதல், அறநெறிப் பாடசாலைப் பரீட்சைகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் நாட்களில் பாடசாலைப் பரீட்சைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாதிருத்தல், அறநெறிப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுதல், அறநெறிப் பாடசாலைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கற்பித்தல் கருவிகளைப் பெற்றுக்கொள்ளுதல், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குகையில் அறநெறிப் பாடசாலை தர்மாச்சார்ய பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு விசேட புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தல், அறநெறிப் பாடசாலைக் கல்வியை ஒரு முறையான மற்றும் பெறுமதியான கல்வியாக மேலும் அபிவிருத்தி செய்தல் போன்ற தேவைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில், அகில இலங்கை சாசனாரக்ஷக பலமண்டலத்தின் பிரதம பதிவாளர் முகுனுவெல அநுருத்த தலைமைத் தேரர் உட்பட மகாசங்கத்தினர், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் கதுன் வெல்லஹேவ மற்றும் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.