ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் டைபிரேக்கரில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
அதேவேளையில் மற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா ஆகியோர் டை பிரேக்கரில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
கோவாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 4-வது சுற்றின் இரு ஆட்டங்களையும் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா, வி.பிரணவ், வி.கார்த்திக் ஆகியோர் டிராவில் முடித்திருந்தனர். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நேற்று டைபிரேக்கர் ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் பிரக்ஞானந்தா 1.5-2.5 என்ற கணக்கில் ரஷ்யாவின் டேனியல் துபோவிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். கடந்த 2023-ம் wஆண்டு நடைபெற்ற தொடரில் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டி வரை முன்னேறிய நிலையில் தற்போது 4-வது சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.
அர்ஜுன் எரிகைசி 3-1 என்ற கணக்கில் ஹங்கேரியின் பீட்டர் லெகோவையும், பி.ஹரிகிருஷ்ணா 2.5-1.5 என்ற கணக்கில் சுவீடனின் நில்ஸ் கிராண்டேலியஸையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
வி.பிரணவ் 0.5-1.5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவிடமும், வி.கார்த்திக் 0.5-1.5 என்ற கணக்கில் வியட்நாமின் லெ குவாங் லீமிடமும் தோல்வி அடைந்தனர்.

