இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனேடிய நபர் ஒருவர் கொல்லப்பட்டதில் மோடியின் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ள போதிலும், இந்த மாத இறுதியில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் முக்கிய பங்கு வகிப்பதால் இந்தியாவை மேசையில் வைத்திருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர் தனது அழைப்பை நியாப்படுத்தியுள்ளார். இருதரப்பு ரீதியாக, சட்ட அமுலாக்க உரையாடலைத் தொடர தற்போது ஒப்புக்கொண்டுள்ளோம். எனவே அதில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆதலால் இந்தியப் பிரதமருக்கு தான் அழைப்பு விடுத்ததாக பிரதமர் கார்னி கூறினார்.
இந்த அழைப்பிற்கு கனடாவின் உலக சீக்கிய அமைப்பு (World Sikh Organization of Canada) தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், உச்சி மாநாட்டிற்கு மோடியை அழைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கார்னிக்கு கடிதம் எழுதியுள்ளது. குறித்த அமைப்பின் சட்ட ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான பல்பிரீட் சிங் கூறும்போது, மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது கனேடிய மதிப்புகளுக்கு கார்னி செய்த துரோகம் என வர்ணித்தார்.
இரண்டு ஆண்டுகளின் முன்னர் ஹர்தீப் சிங் படுகொலைக்கு அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இந்தியாவை நேடியாக குற்றம் சாட்டிய போதும் ட்ரூடோவின் குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் நிராகரித்ததுடன், கனடா காலிஸ்தானி பயங்கரவாதிகளை ஆதரிப்பதாகக் கூறியது.
ஹர்தீப் சிங்கின் மரணம் குறித்த பதிலளிக்கப்படாத கேள்விகள் எஞ்சியுள்ள நிலையில், மோடியை அழைக்கும் அவரது முடிவு குறித்து கேட்டபோது, சட்ட நடைமுறை நடந்து கொண்டிருக்கும் போது ஒரு தலைவர் அதைப் பற்றிப் பேசுவது ஒருபோதும் பொருத்தமானதல்ல என்று கார்னி பதிலளித்தார். இந்தியா G7 உறுப்பு நாடாக இல்லாத போதும், 2019 முதல் மாநாட்டை நடத்தும் நாடு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.