இந்திய பாதுகாப்பு, இயற்கை பேரிடர் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறியும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான, ‘இஸ்ரோ’ புவி வட்டப்பாதையில் மிகவும் சக்தி வாய்ந்த EOS-05 (GISAT-1A)-ஐ என்ற செயற்கைக்கோளை முதல்முறையாக, GSLV-F17 ரொக்கெட் வாயிலாக, நேற்று வெள்ளிக்கிழமை (4) அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
GSLV-F17 ரொக்கெட் வாயிலாக, EOS-05 என்ற நிகழ்நேர படமெடுக்கும் செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டு, 18 நிமிடங்கள், 34 வினாடிகள் பயணித்து, புவியின் ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து, 36000 கிலோமீற்றர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 செயற்கைக்கோள், நிகழ்நேரத்தில் மிகத்துல்லியமான படங்களை எடுத்து அனுப்பும் வகையில், புவியின் வேகத்திலேயே தொடர்ந்து, இந்தியாவை சுற்றி வரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன் பணிக்காலம் ஏழு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 ஆண்டுகள் வரை பணியாற்றும் வகையில், மிகவும் சக்தி வாய்ந்த 2,280 வாட்ஸ் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில், ‘Hyperspectral Imaging – HSI’ எனும் அதிநவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
தற்போது, புவியின் துணை வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் செயற்கைக்கோள், அடுத்த 5 – 6 நாட்களில், துல்லியமான இறுதிச் சுற்றுப்பாதைக்கு, செலுத்தப்படும் என்றும் அதன் பிறகு அதற்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளை தொடங்கும் என தெரிவித்துள்ளது.
