முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களின் முறையான தரப்படுத்தலுக்கு எதிர்காலத்தில் தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதும், முன்னிளம் பருவ ஆசிரியர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்த தேசிய அளவிலான பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்யும் நோக்கத்திலும் செயல்படுத்தப்படும் “பாதுகாப்பான சிறுவர் உலகம் – படைப்பாற்றல் மிக்க எதிர்கால தலைமுறை Clean Sri Lanka – STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” எண்ணக்கருவை நனவாக்கும் வகையில், சிறுவர்களின் பாதுகாப்பிற்காக Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை செயல்படுத்துகின்றது.
சுகாதார ஊக்குவிப்பு பணியகம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றுடன் இணைந்து 900 முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களுக்கு சிறுவர்களின் அடையாளம் காணப்பட்ட பத்து ஆளுமைகளை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கற்றல் கருவிகள் மற்றும் சிறப்பு வள கருவிகளும் இங்கு விநியோகிக்கப்பட்டன.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்) ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர ஆகியோருடன் மாகாண ஆளுநர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.

