Canada Post இற்கும் அதன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்குமிடையில் தொடர்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில் உடன்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளபோது திடீரென பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக Canada Post தொழிற்சங்கத்திற்கு அறிவித்துள்ளது.
பல தடவைகள் நடைபெற்று முடிந்த பேச்சுவார்த்தைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றம் எதுவுமற்ற நிலையில், Canada Post கனேடிய தபால் ஊழியர்கள் சங்கத்திடம் (CUPW) விவாதங்களில் தற்காலிக இடைநிறுத்தம் அவசியம் என்று தெரிவித்துள்ளது. இந்த இடைநிறுத்தம் பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக முன்னோக்கி நகர்த்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டங்களைத் தயாரிப்பதில் Canada Post இற்கு உதவும் என அதன் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொழிற்சங்கம் கூறும்போது, விடயத்தின் தீவிரத்தன்மையையும், தொழிலாளரர்களின் நன்மையையும், அனைத்து கனேடியர்களின் தேவையையும் கருத்திற்கொண்டு விரைவாக தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் தொழிலாளர்களையும் பொதுமக்களையும் விளிம்பில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், வார இறுதி விநியோகத்தை மேற்கொள்ள ஏற்கெனவே உள்ள கூட்டு ஒப்பந்த மொழியைப் பயன்படுத்துவதற்கான எங்கள் சலுகையையும் அவர்கள் புறக்கணித்துவிட்டனர் எனவும் Canada Post மீது குற்றம் சாட்டுகின்றது.
கடந்த ஆண்டு வேலைநிறுத்தத்தின் போது, சுமார் 55,000 தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தனர். இதனால் பரபரப்பான விடுமுறை காலத்தில் பெரும் அஞ்சல் தேக்கம் ஏற்பட்டது அவற்றில் சில விநியோகங்கள் இந்த ஆண்டின் தொடக்கம்வரை பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.
இதனிடையே பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் வேலைநிறுத்தம் பற்றிய நிச்சயமற்ற தன்மையால் அதன் சேவைகளை நம்பியிருக்கும் மக்களுக்கும், வணிகங்களுக்கும் சவாலானது என்பதை Canada Post ஏற்றுக்கொண்டுள்ளது.