British Columbia மாகாணத்தின் உட்பகுதியான Kootenay Pass பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 23 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Avalanche Canada அமைப்பின் தகவல்படி, Selkirk மலைத்தொடரில் இரண்டு பேர் பனிச்சறுக்கு வாகனத்தில் (Snowmobile) சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மற்றவர்கள் உதவியுடன் மீட்கப்பட்ட போதிலும், ஒரு இளைஞர் உயிரிழந்ததாக RCMP உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை Kananaskis அருகே உள்ள Nakiska பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், இது இந்த வாரத்தின் இரண்டாவது சோகமான சம்பவமாக பதிவாகியுள்ளது.
அதேபோல், இந்த பருவத்தில் BC மாகாணத்தில் பனிச்சரிவினால் ஏற்படும் 5-வது உயிரிழப்பு இதுவாகும்.
தற்போதைய கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றினால் Revelstoke உள்ளிட்ட பல பகுதிகளில் பனிச்சரிவு அபாயம் ‘அதிகம்’ (High Risk) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பனிப்பொழிவுக்குப் பின் தென்படும் தெளிவான வானிலை (Blue skies) மக்களை ஈர்க்கக்கூடும், ஆனால் அது ஒரு ‘போலியான பாதுகாப்பு உணர்வு’ (False sense of security) என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நிலைமை சீராகும் வரை மலைப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான தாழ்வான சமவெளிப் பகுதிகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

