செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் நிதியுதவியுடன்கூடிய முழுமையானதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ப்ளக்மென் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழி முதற்தடவையாகக் கண்டறியப்படுவதற்குக் காரணமாக அமைந்த பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு திங்கட்கிழமையுடன் (7) 30 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
இந்நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் கருத்துரைத்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ப்ளக்மென், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையானது செம்மணி மனிதப்புதைகுழி கண்டறியப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாகவும், தற்போது அதிலிருந்து 600 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாக செம்மணி மாறியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இவ்விடயம் தொடர்பில் நிதியுதவியுடன்கூடிய முழுமையானதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
