இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் இருந்து திங்கட்கிழமை காலை உதம்பூர் மாவட்டம் நோக்கி 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
காலை 10 மணியளவில், ராம்நகர் பகுதியில் உள்ள காகோர்ட் கிராமம் அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச் சுவரில் மோதி மலையிலிருந்து விழுந்து பள்ளத்தில் உருண்டது.
அப்போது கேட்ட அலறல் சத்தத்தால் அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, சிதறிய பேருந்தில் சிக்கி காயமடைந்த பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அத்துடன், மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினரும் பிற மீட்புக் குழுவினரும் இணைந்து, காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் 15 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்த பயணிகளுக்கு ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

