அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் மதுவரித் திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் குறித்து மீளாய்வு செய்வதற்காகநேற்று (30) பிற்பகல் அதன் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மதுவரித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான வருமான இலக்கான 227.4 பில்லியன் ரூபாவைத் தாண்டி 231.3 பில்லியன் ரூபா வருமான இலக்கை மதுவரித் திணைக்களம் எட்டவுள்ளதுடன், இது வரலாற்றில் முதல் முறையாக 102% வருமான இலக்காக அமைகின்றது.
அரச வருமானம் எவ்வளவு ஈட்டப்படுகிறது என்பதிலே நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வருமானம் குறைந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், 2020-2021 ஆம் ஆண்டில் அரச வருமானம் பெருமளவில் குறைந்ததன் விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.
வாகனங்கள் மற்றும் கட்டிட வசதிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், குறிப்பாக நிறைவேற்றுப் பதவிகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை உள்ளக இணக்கப்பாட்டுடன், விரைவாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், மதுவரி கட்டளைச் சட்டத்தின் திருத்தம் மற்றும் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் சோதனைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆகியவை பற்றியும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.
தொழில் அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.பீ.என்.ஏ. பேமரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பணிக்குழாமினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

