தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாளை (31) முக்கியமானதொரு அரசியல் சமருக்கு முகம்கொடுக்கின்றது.
கூட்டு எதிரணியின் வியூகத்தை தோற்கடித்து இச்சமரில் வெல்வதற்கு தேசிய மக்கள் சக்தி தீவிரமாக செயல்பட்டுவருகின்றது. மறுபுறத்தில் கூட்டு வியூகத்தை தக்கவைக்க ஐக்கிய மக்கள் சக்தி போராடிவருகின்றது.
இலங்கையில் உள்ள உள்ளாட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபையென்பது மிக முக்கியத்துவம்மிக்க சபையாகக் கருதப்படுகின்றது. எனவேதான், அச்சபையின் வரவு- செலவுத்திட்டம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கின்றது.
கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நாளை 31 ஆம் திகதி மீண்டும் முன்வைக்கப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
இதன்போது வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ரீதியிலான பின்னடைவு என கருதப்படுகின்றது.
இந்நிலையிலேயே வரவு- செலவுத் திட்டம் 2ஆவது தடவையாக நாளை முன்வைக்கப்படுகின்றது.
வாக்கெடுப்பின்போது வரவு- செலவுத் திட்டம் நிறைவேறும் எனவும், எதிரணி உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்பார்கள் எனவும் கொழும்பு மேயர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, “இல்லாத மனசாட்சியை பற்றி கொழும்பு மாநகர சபை மேயர் கதைத்துக்கொண்டிருக்கின்றார். அவரது இயலாமை காரணமாகவே வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதீடு ஏன் தோற்கடிக்கப்பட்டது என்பதை கண்ணாடி முன் நின்று, தனது மனசாட்சியிடம்தான் அவர் கேட்க வேண்டும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்குரிய கூட்டு எதிரணியின் அரசியல் சமரை முஜிபூர் ரஹ்மான் எம்.பியே வழி நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

