கனடாவில் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சைபர் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளை பிணையாக்கி பணம் கேட்கும் குற்றவாளிகள் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை பயன்படுத்தி தங்களது தாக்குதல்களை எளிதாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அறிக்கையில், கனடாவில் ரான்சம்வேர் அச்சுறுத்தல் “தொடர்ந்து அதிகரித்து வேகமாக மாற்றமடைந்து வருகிறது” என்றும், தீங்கிழைக்கும் குழுக்கள் மேலும் நுட்பமான முறைகளை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பல தொழில்கள், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகள் சைபர் குற்றவாளிகளால் டிஜிட்டல் முறையில் முடக்கப்பட்டு, தரவுகளை மீட்க பணம் கோரப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சில நேரங்களில் குற்றவாளிகள் ரகசிய தகவல்களை திருடி, பணம் செலுத்தப்படாவிட்டால் அவற்றை வெளியிடுவதாக மிரட்டுகின்றனர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், கணினி பலவீனங்களை கண்டறிதல், தீங்கு விளைவிக்கும் மென்பொருள் உருவாக்குதல், டீப்ஃபேக் படங்கள் தயாரித்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தானியங்கி பேச்சுவார்த்தை நடத்துதல் போன்றவற்றிற்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது

