ரி20 உலகக் கிண்ணம் முடியும் வரை இலங்கை அணியின் (ரி20) தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார் எனவும் இலங்கையிலும் இந்தியாவிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு அதி சிறந்த 15 வீரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் எனவும் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையக கேட்போர்கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உப்புல் தரங்க தலைமையிலான தேர்வுக் குழுவின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய தேர்வுக் குழுவில் பிரமோதய விக்ரமசிங்க (தலைவர்), வினோதன் ஜோன், இந்திக்க டி சேரம், தரங்க பரணவித்தான, ரசஞ்சலி டி அல்விஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
அவர்கள் அனைவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரமோதய விக்ரமசிங்க,
‘முந்தைய தெரிவுக் குழு மற்றும் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய ஆகியோர் வகுத்த திட்டத்தை ரி20 உலகக் கிண்ணம் வரை மாற்றாமல் தொடரவுள்ளோம். திடீர் மாற்றங்கள் செய்வதால் பலன் கிடைக்காது. ரி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு அவர்கள் 25 வீரர்களைக் கொண்ட முன்னோடி குழாத்தை பெயரிட்டுள்ளனர். எமது முதலாவது பணி என்னவெனில் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு மிகச் சிறந்த வீரர்களைத் தெரிவுசெய்வதாகும். இதுதான் எமது குறுகிய கால திட்டமாகும். உலகக் கிண்ணத்திற்கு முன்னர் பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான இருதரப்பு தொடர்களில் இலங்கை 6 ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அத்துடன் இலங்கை குழாத்திற்கு தீவிர பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இரண்டு பயிற்சிப் போட்டிகளும் நடத்தப்படும்’ என்றார்.
சரித் அசலன்கவை தலைவர் பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் தசுன் ஷானக்கவை ரி20 அணித் தலைவராக நீயமித்தமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரமோதய விக்ரமசிங்க,
‘நான் தெரிவுக் குழுத் தலைவராக இருந்த முதலாவது தவணையின்போது தசுன் ஷானக்க தலைவராக இருந்தார். அவர் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சரித் அசலன்கவை தலைவராக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அப்போதைய தெரிவுக் குழுவினர் விரும்பினர். அதன் படி அவர் இரண்டுவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் திறமையை வெளிப்படுத்தி வந்தபோதிலும் அண்மைக்காலமாக ரி20 போட்டிகளில் அவரால் பிரகாசிக்க முடியாமல் போயுள்ளது. தலைவராக அழுத்தங்களை எதிர்கொள்வதால் அவரால் பிரகாசிக்க முடியாமல் போயிருக்கலாம் என்பதைக் கருத்தில்கொண்டே அவரை நீக்கிவிட்டு தசுன் ஷானக்கவை ரி20 அணியின் தலைவராக நியமித்துள்ளோம்.
இது முந்தைய தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவாகும். எனவே அடுத்துவரும் போட்டிகளில் சரித் அசலன்கவுக்கு சுதந்திரமாக விளையாடக்கூடியதாக இருக்கும். மேலும் 3 உலகக் கிண்ணப் போட்டிகள், 2 ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அனுபசாலியான தசுன் ஷானக்க சகலதுறை வீரராக அணியில் இடம்பெறுவார்’ என்றார்.
இதேவேளை, இடைக்கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களையும் அவர் வெளியிட்டார்.
‘ரி20 உலகக் கிண்ணம் முடிவடைந்தவுடன் இடைக்காலத் திட்டம் ஆரம்பமாகும். தற்போது தேசிய அணி வாயிலைத் தட்டிக்கொண்டிருக்கும் பல வீரர்கள் இலங்கை குழாத்திற்குள் ஈர்க்கப்படுவார்கள். இந்த வீரர்களின் குறைகளை பயிற்றுநர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உயர்ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் அதிஉயர் பயிற்சிகளை வழங்கவேண்டும். வீரர்களின் திறமை மேம்படாவிட்டால் அதற்கான பொறுப்பை பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் பொறுப்பேற்கவேண்டும். பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் கடமையில் தவறினால் அது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம் எடுக்க வேண்டும்’ எனவும் தெரிவுக் குழுத் தலைவர் கூறினார்.
‘நீண்டகாலத் திட்டத்திதின்கீழ் பாடசாலைகள் கிரிக்கெட்டில் திறமையை வெளிப்படுத்தும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் 45 பேரை வருடா வருடம் தெரிவு செய்து அவர்களுக்கு ஒரு வருட பயிற்சி முகாம் நடத்தப்படும். இதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் பெறவுள்ளோம். இந்த ஒரு வருட பயிற்சி முகாமின்போது அவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு, தொழில்நுட்பம், ஆளுமை உருவாக்கம், ஒழுக்கம், கிரிக்கெட் விதிகள் என்பன போதிக்கப்படும். அத்துடன் அடிப்படை பயிற்சிகளும் வழங்கப்படும். அதன் பின்னர் அவர்களை கழக மட்டப் போட்டிகளில் விளையாடச் செய்து உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் மேலதிக பயிற்சிகளில் ஈடுபட அனுப்புவோம்’ எனவும் அவர் கூறினார்.

