தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான (NOC) புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை நடத்த ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் தலைமையிலான நிறைவேற்றுச் சபை குழுவினர் தவறினால் அதன் உறுப்பு சங்கங்கள்/சம்மேளனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஊடகவியலாளர்கள் மத்தியில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர் எச்சரித்தார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய நிறைவேற்றுச் சபையின் பதவிக் காலம் 2025 டிசம்பர் 27ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் அடுத்த நான்கு ஆண்டுகள் கொண்ட தவணைக்கான புதிய நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை நடத்துவது சுரேஷ் சுப்ரமணியம் தலைமையிலான நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களின் தலையாக கடமை எனவும் அவர் கூறினார்.
தற்போது தடயவியல் கணக்காய்வு நடைபெற்று வருவதால் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் சாக்குப்போக்கு கூறிவருவதாகவும் ஜஸ்வர் உமர் சுட்டிக்காட்டினார்.
அப்படியானால் இலங்கையில் உள்ள சகல விளையாட்டுத்துறை சங்கங்களும் இதே போன்று சாக்குப் போக்குகளைக் கூறி தேர்தலை பின்போட முடியுமா? அதனை இலங்கை விளையாட்டுத்துறை யாப்பு விதிகள் அனுமதிக்குமா? என்ற கேளவிகளை ஜஸ்வர் உமர் எழுப்பினார்.
தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவருக்கு எதிராக தனக்கோ, தேசிய ஒலிம்பிக் குழுவின் 31 உறுப்பு சங்கங்களுக்கோ தனிப்பட்ட பகைமையோ பழிவாங்கும் எண்ணமோ இல்லை எனவும் அவர் கூறினார்.
என்றாலும் தேசிய ஒலிம்பிக் குழுவின் யாப்பு விதிகளை மீறும் வகையில் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் நிறைவேற்றுச் சபைக் குழுவினர் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால் அதனை அனுமதிக்கப் போவதில்லை என ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் நிறைவேற்றுச் சபையில் ஏற்பட்ட பதவி வெற்றிடங்களுக்கு ஒலிம்பிக் யாப்பு விதிகளுக்கு முரணான வகையில் தேர்தல் நடத்தப்படாமலும் பொதுச் சபையின் ஒப்புதல் இல்லாமலும் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜஸ்வர் உமர், அவர்கள் 6 பேரும் தாங்களாகவே விலகிக்கொள்வது நல்லது என கூறினார்.
‘2018இல் சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட யாப்பு விதிகளின் 6ஆம் இலக்க பரிந்துரையில், ஒரு பதவிக்கு வெற்றிடம் ஏற்படும்போது பொதுச் சபைக் கூட்டத்தில் தேர்தல் மூலம் அப் பதவி நிரப்பப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றுவரை பொதுச் சபை கூட்டப்படவும் இல்லை தேர்தல் நடத்தப்படவும் இல்லை’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மிகவும் பொறுப்பு வாய்ந்த, கணக்குவழக்குகளைக் கையாளும் பொருளாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்படும்போது அப் பதவிக்கு ஒருவரைத் தெரிவுசெய்யும் பொறுப்பும் உரிமையும் ஒலிம்பிக் குழுவில் அங்கம் வகிக்கும் 31 சங்கங்களுக்கு இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாப்பு விதிகளுக்கு முரணான வகையில் பொருளாளர் நியமிக்கப்பட்டது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கும் தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ அரச வங்கிக்கும் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
நிதி பரிவர்த்தனைகளில் கையொப்பங்கள் வேறுபட்டிருந்தால் கவனமாக இருக்குமாறும் பணம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட வங்கி, ஒலிம்பிக் குழுவின் கணக்கை இடை நிறுத்தி வைத்தது. இது நடந்து பல மாதங்கள் கடந்த நிலையில் நிறைவேற்றுக் குழுவிற்கோ அல்லது தலைவருக்கோ அறிவிக்காமல் வங்கிக்கு எவ்வாறு தகவல் கொடுத்தீர்கள் என எங்களிடம் இப்போது விளக்கம் கோரப்படுகின்றது. எதிர்காலத்தில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் எனது பதவியை இழப்பேன் என்றும் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் ஜஸ்வர் உமர்.
‘எங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனுப்பப்பட்டுள்ள கடிதமும் சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. அந்தக் கடிதம் சுப்ரமணியத்தின் எதிரியால் அனுப்பப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் அந்தக் கடிதத்தில் சுப்ரமணியத்தின் கையொப்பத்திற்கு பதிலாக அவரது கையொப்ப முத்திரை (சீல்) பதிக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் குறிப்பிடப்பட்ட திகதியன்று சுப்ரமணியம் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். விளக்கம் கோரி அனுப்பப்பட்ட கடிதத்தில், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கடித தலைப்பில் கடிதம் அனுப்பபடவில்லை என்றும் நான் தனிப்பட்ட முறையில் கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் என முகவரியிட்டு என்னிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எங்கள் சட்டக் குழு மூலம் நாங்கள் பதிலளிப்போம்’ என்று ஜஸ்வர் உமர் கூறினார்.
இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் விரைவில் குணமடைந்து நாடு திரும்பி தேர்தலை நடத்தி இப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக, துபாய் வைத்தியசாலை ஒன்றில் தற்போது சிகிச்சை பெற்று தேறிவரும் தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்திடம் வினவியபோது, ‘தேசிய ஒலிம்பிக் குழுக்கள் மற்றும் ஒலிம்பிக் இயக்கத்தின் மீது சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு உச்ச அதிகாரம் இருப்பதாகவும் தேசிய ஒலிம்பிக் குழுக்களின் தேர்தல்களை மேற்பார்வையிடவும் தாமதப்படுத்தவும் முடியும் எனவும் பதிலளித்தார்.
தற்போது தடயவியல் கணக்காய்வு நடைபெற்றுவருவதால் தேர்தல் நடத்த முடியாமல் இருப்பதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழுவும் ஆசிய ஒலிம்பிக் பேரவையும் இணங்கிய பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

