மலையாள நடிகையான ஹனி ரோஸ், தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
அவர் இப்போது ‘ரேச்சல்’ என்ற பான் இந்தியா படத்தில் மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்துள்ளார். ஆனந்தினி பாலா இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா ராதாகிருஷ்ணன், பாபுராஜ், சந்து சலீம்குமார், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில், ரோஷன் பஷீர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிச.6ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹனி ரோஸ் பேசும்போது, மலையாள சினிமா தன்னை ஒதுக்குவதாகக் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ”மலையாள சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இயக்குநர் வினயன் சார் தான் என் கையைப் பிடித்து சினிமாவுக்கு இழுத்து வந்தார். இன்றைய சூழலில் மலையாள சினிமாவுக்கு நான் தேவையா? என்று கேட்டால், இல்லைதான். நான்தான் அதில் ஒட்டிக் கொண்டிருக்கிறேன். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறேன். சில படங்களில் நடிக்கும்போது, அவற்றில் கடவுளின் கையெழுத்து இருக்கும் என்று உணர்கிறேன். எனக்கு அப்படியொரு உணர்வை ஏற்படுத்திய படம் ரேச்சல். இது பெண் மையக் கதை என்றாலும் வணிக ரீதியான பொழுதுபோக்கு படம்தான்” என்றார்.
HinduTamil

