கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தனது பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதற்கு நடிகர் ஷாருக்கான் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்திய அளவில் மிக பிரபலமான நடிகரான ஷாருக்கான் இன்று (நவ.02) தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகம் முழுவதும் இருந்தும் ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மும்பை, மன்னத் பகுதியில் இருக்கும் தனது வீட்டின் மாடியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஷாருக் சந்திப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கூட்டத்துக்கு முன்னால் நின்று ஷாருக்கான் எடுக்கும் செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகும்.
ஆனால் இந்த ஆண்டு தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இயலாததற்கு ஷாருக் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனக்காக காத்திருந்த அன்பான மக்கள் அனைவரையும் நான் வெளியே சென்று வரவேற்க முடியாது என்று அதிகாரிகள் எனக்கு தெரிவித்து விட்டனர். உங்கள் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நெரிசல் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் காரணமாகவும் அனைவரது ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னை நம்பியதற்கும் புரிந்துகொண்டதற்கும் நன்றி. உங்களைப் விட அதிகமாக நான் உங்களைப் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்த்து அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆவலுடன் காத்திருந்தேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

