பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் 58 ராணுவ வீரர்களும் ஆப்கான் படையில் ஒன்பது பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது அண்மைய காலத்தில் இரு தரப்புக்கும் இடையே இடம்பெற்ற கடும் தாக்குதலாக கருதப்படுகிறது.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி தரும் வகையில் தலிபான் படையினர் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டதாக ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் சவுதி அரேபியா மற்றும் கட்டாரின் தலையீடு காரணமாக நேற்று இரவு இரு தரப்புக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக ஆப்கானிஸ்தான் அரசியல் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஆப்கானிஸ்தானில் ‘தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்’ உறுப்பினர்கள் யாரும் இல்லை. நாம் பேச்சுவார்த்தைக்கு தயார்.நாம் அமைதிக்காக பாடுபடுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ‘எங்கள் எல்லையை பாதுகாப்போம். உள்நாட்டு அளவில் வேறுபாடுகள் இருப்பினும் நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ என ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் அமீர்கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.

