0.8 C
Scarborough

ஜெனீவா விடயத்தில் தடுமாறும் அரசு – சாணக்கியன் எம்.பி

Must read

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இரண்டுவார கால அவகாசம் கோரிய நிலையில், ஜெனீவாவில் தாம் எடுத்த நிலைப்பாடு தொடர்பில் பதிலளிக்க முடியாமல் இருப்பதனாலேயே இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அரசாங்கம் நழுவிச் செல்கிறது என்று இலங்கை தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது சாணக்கியன் எம்.பியால் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

பிரதமரிடத்தில் தனது கேள்விகளை முன்வைத்து சாணக்கியன் எம்.பி. கூறுகையில்,

‘‘ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் இறுதியில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றும் செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரதமரிடத்தில் சில கேள்விகளை முன்வைக்கின்றேன்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இந்த சபையில் தெளிவுபடுத்த முடியுமா?

மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை தனித் தனியாக முன்வைத்து, அந்தப் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் வேறு சர்வதேச மாற்று யோசனையை பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான பரிந்துரை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?’’ என்று கேள்வியெழுப்பினார்.

இதன்போது பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகையில்,

‘‘சாணக்கியன் எம்.பி. இதற்கு முன்னர் வேறு கேள்விகளையே பிரதமரிடத்திலான கேள்வியில் கேட்டிருந்தார். அதற்காகவே நான் தயாராக இருந்தேன். ஆனால் இந்த புதிய கேள்விகள் நேற்றைய தினமே (செவ்வாய்க்கிழமை) கிடைத்தது. இதனால் இதற்கு பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்’’ என்றார். இவ்வேளையில் மீண்டும் எழுந்த சாணக்கியன் எம்.பி, ‘‘பிரதமர் தயாராக வந்த கேள்விகளுக்கு வேண்டுமென்றால் பதிலளிக்குமாறு கேட்கின்றேன். நான் அனுப்பியிருந்த கேள்விகளை பாராளுமன்றத்தில் கொள்கைகள் தொடர்பில் கேட்க முடியும் என்று கூறியதால் அந்த கேள்விகளை மாற்றினேன்’’ என்றார்.

இதன்போது ஆளுங்கட்சி பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில்,

‘‘பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கே அவர் பதில்களை தயாரிக்க வேண்டும். அவர் கேள்விகளுக்கு பதில்களை தயார்படுத்திக் கொண்டிருந்தபோது, கேள்விகளை மாற்றியுள்ளீர்கள். புதிய கேள்விகளை முன்வைத்துள்ளமையினால் அடுத்த பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில் பதிலளிப்பார். எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார்’’ என்றார்.

இவ்வேளையில் மீண்டும் எழுந்த சாணக்கியன் எம்.பி, ‘‘நான் முதலில் கொடுத்த கேள்விகளை மீளப்பெற்றுக்கொண்டு வேறு கேள்விகளை வழங்கியதாகக் கூறுவது தவறான நிலைப்பாடாகும். நான் முதலில் வழங்கிய கேள்விகள் நிலையியற் கட்டளைக்கமைய மாற்ற வேண்டும் என்று கூறியதால் நான் மாற்றினேன். நான் எழுதிக்கொடுத்த கேள்விகளை மாற்றவில்லை. ஏன் அரசாங்கத்தால் இதற்கு பதிலளிக்க விருப்பமில்லை என்று புரிகின்றது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் எடுத்த நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கத்தால் பதிலளிக்க முடியாது. இது முக்கியமான பிரச்சினையாகும். சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது. வேலைகள் செய்யாமல் வாக்குறுதிகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நேரத்தில் இந்தக் கேள்விகளில் பிரச்சினை இருப்பதாக கூறுவது கேள்வியிலிருந்து நழுவிச் செல்வதாகும். இது அநீதியானது’’ என்றார்.

இதன்போது மீண்டும் பதிலளித்த ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ‘‘நாங்கள் கேள்வியிலிருந்து நழுவிச் செல்லவில்லை. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றுவார்’’ என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article