13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் , கொழும்பில் இன்று நடைபெற்ற 9-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் ஆடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 109 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட பாகிஸ்தான், ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 36.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமின் 35 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கிம் கார்த் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த தொடரில் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆட உள்ளன.

