5.4 C
Scarborough

புலம்பெயர் தமிழர்களுக்காக கூலி நாடகம் அரங்கேற்றும் போலி தேசியவாதிகள்!

Must read

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இறுதி நாளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

“கடந்த ஒரு வார காலமாக திலீபன் நினைவேந்தல் நடைபெற்றது. அங்கு அனுஷ்டிப்பை செய்ய நாங்கள் சென்றபோது தடுக்கப்பட்டோம். அதன் பிறகு சில தினங்களுக்கு முன்னர் இறுதி நாள் நினைவேந்தல் நடந்து முடிந்தது. அன்று யாரோ ஒருவர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாகவும் அவர் மீது தங்கள் வன்முறையை கஜேந்திரர் அணி கையாண்டதாகவும் அதேபோன்று நியாயத்தன்மையை கேட்கச் சென்ற வேறு சிலருக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. இதில் எந்தப் பங்களிப்பும் கிடையாது. அந்தளவுக்குக் கீழ்த்தரமான வேலை எம்மிடம் கிடையாது.” எனவும் அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

நாங்கள் ஆளும் கட்சி என்ற வகையில் சின்னச் சின்ன சிலும்பல் வேலைகளுக்கு எதிராக நாங்கள் எடுக்க வேண்டுமாக இருந்தால் இதைவிட வேறு விதமாக எடுக்க முடியும். அந்தச் சின்னத்தனமான வேலைகளை நாங்கள் செய்வதில்லை.

மனிதனை அனுஷ்டிப்பதற்கோ, போராடுவதற்கோ கருத்துச் சொல்வதற்கோ பூரணமான சுதந்திரம் இருக்கின்றது. ஊடக சுதந்திரத்தை எடுத்துக் கொண்டாலும் சரி கருத்துச் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டாலும் சரி முன்னரை விட தற்போது சுதந்திரம் அதிகமாக இருப்பதனாலேயே, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் எமக்கு எதிராகப் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

போராடுவதற்கான உரிமை இருப்பதன் காரணமாகவே கடந்த காலங்களைப் போன்று புலனாய்வு பிரிவினராலும் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் எந்தவித இடையூறும் இல்லாமல் இந்த வன்முறையைக் கையாளுகின்ற கஜேந்திரகுமார் அணி எங்கள் மீது சேறுகளை வீசுகின்றார்கள்.

இந்த நபர்களுக்கு வேறு அரசியல் கிடையாது. இவர்களுக்கு இருக்கின்ற அரசியல் எங்கள் மீது சேறு வீசுவதை தவிர வேறு எதுவும் கிடையாது.
சகல அபிவிருத்தித் திட்டங்களையும் எதிர்கின்றவர்களாக அவர்கள் மாறி இருக்கிண்றார்கள். 17 வருடங்களுக்குப் பிறகாவது எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என மக்கள் கேட்கின்றார்கள்.

இலங்கையில் இருக்கின்ற மக்களுக்கென்றாலும் சரி யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு என்றாலும் சரி இவர்களுடைய சித்து விளையாட்டுக்கள் அனைத்து நன்றாக தெரியும்.

இவர்கள் போலித்தனமானவர்கள் போலி தேசியவாதிகள் என்பது மக்களுக்கு தெரியும். இவர்களின் கூலி நாடகம் என்பது வெளிநாட்டில் இருந்து வருகின்ற பணங்களால் இடம்பெறுகின்றதே தவிர தங்களுடைய அர்ப்பணிப்பால் தங்களுடைய தியாகத்தால் அல்ல என்பது மக்களுக்குத் தெரியும். நாங்கள் அவற்றை அலட்டிக்கொள்வதில்லை.” – என அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article