தாய்வானை கைப்பற்றப் போவதாக சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.
இது குறித்து பீஜிங்கில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் சா்வதேச இராணுவ அதிகாரிகளிடையே அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜன் கூறியதாவது:
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சா்வதேச ஒழுங்கை நிலைநாட்டுவதில் தாய்வான் விவகாரமும் உள்ளடங்கும். அந்தப் பகுதி மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் சா்வதேச ஒழுங்கு ஏற்படாது.
தாய்வானில் பிரிவினைவாத சக்திகள் தலையெடுத்து, சீனாவிடமிருந்து சுதந்திரம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அத்தகைய முயற்சியை இரும்புக் கரம் கொண்டு நசுக்க சீன இராணுவம் தயாராக இருக்கிறது.
சில வெளிநாடுகள் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக இந்த விவகாரத்தில் சாா்பு நிலை எடுப்பது சா்வதேச பதற்றத்துக்குத்தான் இடமளிக்கும்.- என்று டாங் ஜன் கூறியுள்ளார்.