புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புக்கான ஆரம்ப விழா தற்போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்படுகின்றது.
இதற்காக சுமார் 424 மில்லியன் ரூபா செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கி மேம்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அண்மையில்
அனுமதி வழங்கியது.
இதற்கமைய குறித்த புனரமைப்பு பணிகளின் கீழ், பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறுவப்படவுள்ளன.
இலங்கை விமானப்படையின் நேரடி ஆளனி பங்களிப்புடன் கொழும்பு மாநகர சபை, இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.