பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றியை இந்திய இராணுவத்தினருக்கு அர்ப்பணிப்பதாகவும், தாங்கள் எப்போதும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் பக்கம்தான் நிற்போம் என்று இந்திய கிரிக்கெட் டி20 அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (14) ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின.
இந்தியா, பாகிஸ்தான் மோதிய இப்போட்டியில் 25 பந்துகள் மீதமிருக்க, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா எளிதாக வீழ்த்தியது.
இந்த அபார வெற்றிக்கு பின், இந்திய கிரிக்கெட் டி20 அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில் , “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணுவதற்கு இது சரியான தருணம் என நினைக்கிறேன். நாங்கள்(இந்திய கிரிக்கெட் அணி) பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் பக்கம் நிற்கிறோம். அவர்களுக்கு எங்களின் ஒருமித்த ஆதரவு உண்டு என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.