இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காணும் விடயத்தில் உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 புலம்பெயர் தமிழர் அமைப்புகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து உறுப்பு நாடுகளுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘ பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயல்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் மூலம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளக பொறிமுறைக்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறார்.
உள்ளகப் பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியின் பின்னணியில் இது அச்சுறுத்தலானதொரு நிலையை ஏற்படுத்தும்.
சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றைத் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கையில் சரிவை ஏற்படுத்தும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட:டுள்ளது.
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளக மற்றும் கலப்பு பொறிமுறைகளை முற்றாக நிராகரிப்பதாகவும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்.என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.