13.7 C
Scarborough

வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்ய விரும்பும் தென்கொரிய முதலீட்டாளர்கள் – ஆளுநர் தகவல்!

Must read

தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை (10) இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை தெரியப்படுத்தியுள்ளனர். அவர்கள் இங்குள்ள நிறுவனங்கள் ஊடாகவே தமது முதலீட்டை மேற்கொள்வதற்கு விரும்புகின்றனர். இங்குள்ள இளையோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான தொழிற் பயிற்சியை இங்குள்ள தொழிற் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் ஊடாக வழங்குவதற்கும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். எனவே அவர்கள் இங்கு எவ்வகையான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் ஆராய்வதற்காகவே கலந்துரையாடல் நடத்தப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இலங்கை முதலீட்டுச் சபையால் வடக்கில் அமைக்கப்பட்டு வரும் 3 முதலீட்டு வலயங்களினதும் முன்னேற்றம் மற்றும் அங்கு முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் தொடர்பில் முதலீட்டுச் சபையால் தெளிவுபடுத்தப்பட்டது.

வர்த்தக சமூகப் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் இதன் பின்னர் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.

வடக்கிலிருந்து மூலப்பொருள்களாக தென்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து பெறுமதிசேர் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் இங்கேயே பெறுமதிசேர் ஏற்றுமதிக்கான முதலீட்டு வாய்ப்புக்கு கோரிக்கை முன்வைக்கலாம் எனக் குறிப்பிட்டனர். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டையும் கோரலாம் என ஆலோசனை முன்வைத்தனர். மேலும், வடக்கில் ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படாதுள்ள அல்லது கைவிடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டடங்களைப் பயன்படுத்தி ஏற்றுமதி நோக்கிலான செயற்பாடுகளுக்கு முதலீட்டைக் கோரலாம் எனவும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அதேநேரம், வடக்கில் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். குறிப்பாக அதிகாரிகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலின் பிரதித் திட்டப் பணிப்பாளர் ஆகியோருடன், வர்த்தக சமூகப் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article