நடிகர் ஸ்ரீகாந்த், மு. மாறன் இயக்கத்தில் பிளாக்மெயில் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. பிளாக்மெயில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, புரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஸ்ரீகாந்த் தவிர்த்து வருகிறாராம்.
போதைப்பொருள் வழக்கில் கைதாகியதால் குற்ற உணர்வு மற்றும் பயம் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. சினிமாவுக்கு வந்த புதிதில் பல ஹிட் படங்களை கொடுத்த ஸ்ரீகாந்திற்கு அதன் பிறகு படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. இதனால் சினிமா வாய்ப்புகளும் குறைந்தன. கடந்த ஆண்டு அவர் நடித்த தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன.
இதனால் ஹீரோ அல்லாத கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இந்த சூழலில்தான் போதைப்பொருள் வழக்கிலும் சிக்கிக் கொண்டார். கடந்த ஜூன் 23ஆம் தேதி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், கிட்டத்தட்ட ஒரு மாத சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.