காஸா நகரில் இருந்து இரு பணயக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில், இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் படையினரால் கொல்லப்பட்ட இலான் வெய்ஸ் என்பவரின் உடலும், மற்றொரு அடையாளம் தெரியாத ஒருவரின் உடலும் தற்போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலான் வெய்ஸின் மனைவி மற்றும் குழந்தைகள் ஹமாஸ் படையினரால் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு 2023 நவம்பர் மாத போர் நிறுத்தத்தின்போது அவர்கள் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹமாஸ் படையினர் வசம் 50 பணயக்கைதிகள் இருப்பார்கள் எனக் கூறப்படுகின்ற அதேவேளை 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக நம்பப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.