‘சிரஞ்சீவி’ நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வம்பரா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வம்பரா’. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – ஒரு குழந்தையிடம் கதை சொல்லும் வாய்ஸ் ஓவரில் ஓடத் தொடங்கும் இந்த டீசர் வீடியோவில் ஒரு யுத்தத்தை பற்றி சொல்லப்படுகிறது. ஃபேண்டஸி, ஆன்மீகம், போர் உள்ளிட்ட காட்சித் துணுக்குகளைக் கொண்ட இதில் அவற்றை விஞ்சும் விதமாக அதீத வன்முறைகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. துண்டாக பறந்து செல்லும் கை, நெஞ்சை துளைக்கும் ஈட்டி, ஹீரோவின் கையில் இருக்கும் கண் என ஒரு நிமிட வீடீயோவிலேயே இவ்வளவு ரத்தம் தெறிக்கிறது. சிரஞ்சீவிக்கான மாஸ் அறிமுகமும், கீரவாணியின் விறுவிறுப்பான இசையும், புழுதி பறக்கும் ஆக்ஷன் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. ‘விஸ்வம்பரா’ டீசர் வீடியோ: