தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கிறார். இவர் ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசைநிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ‘ஹூக்கும்’ என்ற இசை நிகழ்ச்சியை கடந்த மாதம் 26ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள திருவிடந்தை என்ற இடத்தில் நடப்பதாக அறிவித்திருந்தார். இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி தரவில்லை. இதனால் நிகழ்ச்சியை ரத்து செய்த அனிருத், டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி வரும் 23ம் தேதியன்று (நாளை) கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் நடைபெறுகிறது’ என்று அறிவித்திருந்தார். இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உளவியல் ரீதியாக மேம்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சி – இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழும்’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கூவத்தூரில் நாளை நடைபெறும் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. பனையூர் பாபு தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி, ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையீடு செய்தனர். மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் அருனித் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என எம்.எல். ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.