தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில், இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் மோத உள்ளன.
இதன் முதல் ஆட்டம் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் தலைமையில் களமிறங்குகிறது. மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்களுடைய இடத்தை நிரப்ப வேண்டிய கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
பேட்டிங்கில் டாப் ஆர்டரில் டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் பலம் சேர்க்கக்கூடும். டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்துள்ள மார்னஷ் லபுஷேன், கணிசமான ரன்களை சேர்த்து கவனம் ஈர்க்க முயற்சி செய்யக்கூடும். ஜோஷ் இங்லிஷ், அலெக்ஸ் கேரி ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்ககூடியவர்களாக திகழ்கின்றனர். வேகப்பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட்டுடன், சேவியர் பார்ட்லெட், நேதன் எலிஸ் அல்லது ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி இடம் பெறக்கூடும். சுழலில் ஆடம் ஸாம்பா இடம் பெறுவார்.
தென் ஆப்பிரிக்க அணி தெம்பா பவுமா தலைமையில் களமிறங்குகிறது. டி 20 தொடரில் சதம் விளாசி கவனம் ஈர்த்த இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் அறிமுக வீரராக களமிறங்கக்கூடும். பேட்டிங்கில் எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, நந்த்ரே பர்கர் ஆகியோரும் சுழலில் கேசவ் மகாராஜும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்