லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’, ஆக.14-ம் தேதி வெளியானது. இதில் நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இதில், சைமன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நானும் ரஜினியும் திரையில் சந்திக்கும்போது, ஒரு காந்த சக்தி இருப்பதை ரசிகர்கள் உணர்கிறார்கள். சிறப்பான படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம். படத்தைச் சுற்றியிருந்த ‘எனர்ஜி’, அதை எங்களுக்கு உணர்த்தியது. எனது கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் சிறப்பானது.
சிறந்த திரைப்படம் என்பது, அனைவரின் ஒத்துழைப்பு, நடிகர்களின் கெமிஸ்ட்ரி, படம் முடிந்த பின்னும் பார்வையாளர்களுக்கு எப்போதும் மறக்கமுடியாத அனுபவத்தைத் தரும் உற்சாகம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவது என்பதை, இந்தப் படம் நினைவூட்டுகிறது. திரையரங்குகளில் கொண்டாட்டத்தைக் காண முடிகிறது. பல சாதனைகள் முறியடிக்கப் பட வேண்டிய ஒன்று. அதை இந்தப் படம் செய்திருக்கிறது”