பொது சேவை ஊழியர்கள் அடுத்த ஆண்டு முழுநேரமாக அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என ஒன்ராறியோ அரசாங்கம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிரம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் அதைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளார்.
தற்போது வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் வேலை செய்யாத நகரத்தின் பொது ஊழியர்கள் ஜனவரி மாதம் முதல் அவ்வாறு செய்ய வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“கொவிட் பரவல் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு தற்காலிக தீர்மானம்.இதில் சில நன்மைகள் இருந்தாலும், அதே அளவிலான உற்பத்தித்திறன் கிடைக்காது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
” ஊழியர்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் இந்தக் கொள்கையை மீண்டும் கொண்டுவருவதில் எவரும் முதல் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்பதே சவாலாக இருந்தது ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ பொது சேவையின் அனைத்து உறுப்பினர்களும் ஜனவரி மாதம் முழுநேரமாக அலுவலகத்திற்குத் திரும்புவார்கள் என்று மாகாண அரசாங்கம் அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது.
தொழிலாளர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய முன்னர் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
பிரவுன் இந்த முடிவை “நீண்ட கால தாமதம்” என்று அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.