13.9 C
Scarborough

மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Must read

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து 700 கி.மீ. தொலைவில் மாலத்தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டின் 60-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று சிறப்பு விமானத்தில் மாலத்தீவின் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். சுதந்திர தின சதுக்கத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பிறகு மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

இந்தியா, மாலத்தீவு இடையிலான தூதரக உறவு 60 ஆண்டுகளை கடந்துள்ளது. இரு நாடுகளின் இடையிலான உறவு கடலைவிட ஆழமானது. பொருளாதார நெருக்கடி, கரோனா பெருந்தொற்று, இயற்கை பேரிடர் காலங்களில் முதல் நபராக மாலத்தீவுக்கு இந்தியா உதவி செய்தது.

இந்தியாவின் சார்பில் மாலத்தீவுக்கு ரூ.5 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்படும். இதன் மூலம் மாலத்தீவின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மக்களின் வாழ்கைத்தரம் மேம்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மாலத்தீவு அதிபரின் மாற்றம்: கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு பதவியேற்றார். சீன ஆதரவாளரான அவர் ஆரம்ப காலத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டார். இந்தியாவுடன் ஏற்கெனவே செய்த 100 ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டார்.

கடந்த 2024-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத் தீவு பயணம் குறித்து மாலத்தீவின் 3 அமைச்சர்கள் எதிர்மறையாக விமர்சனம் செய்தனர். இதன் காரணமாக இந்தியா, மாலத்தீவு உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.

மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் மாலத்தீவின் சுற்றுலா துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. மேலும் சீனாவின் கடன் வலையில் மாலத்தீவு சிக்கித் தவித்தது.

தனது தவறை உணர்ந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மீண்டும் இந்தியாவுடன் நட்புறவை வளர்த்தார். கடந்த ஆண்டு மே மாதம் 3-வது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இந்த விழாவில் மாலத்தீவு அதிபர் முய்சு பங்கேற்றார். தற்போது மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து அவரே விமான நிலையத்துக்கே நேரடியாக வந்து வரவேற்று உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article