10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்த நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது.
முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகும் வரை அந்த அணி பேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் சதம் விளாசும் முயற்சியில் ஈடுபடலாம். இந்நிலையில்தான் இந்திய அணி ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது.
வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி 500+ ரன்களை விட்டுக்கொடுப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் கடந்த 2015-ல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 572 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. அந்தப் போட்டி டிரா ஆனது. அதற்கு பின்னர் இப்போதுதான் இந்தியா வெளிநாட்டில் 500+ ரன்களை விட்டுக்கொடுத்துள்ளது.
மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தின் தட்டையான ஆடுகளம் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி டிரா செய்யும் வகையில் இரண்டாவது இன்னிங்ஸை அணுகுவதுதான் சரியாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.