இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரி கட்டணங்களை மேலும் குறைப்பதற்கும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருகின்றது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மாதாந்திர கச்சா எண்ணெய் கட்டணம் சுமார் 300-400 மில்லியன் டொலர்கள் என்றும், இதை விட செலவு குறைந்ததாக இருந்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதைப் பரிசீலிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அரசாங்க பரிவர்த்தனைகளின் கீழ் கச்சா எண்ணெய் வாங்குவதற்குதடை இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில் அமெரிக்காவில் எரிபொருள் வர்த்தகத்தில் எந்த அரசு நிறுவனமும் ஈடுபடவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவு 4.3 பில்லியன் டொலர்கள் ஆகும்.
இந்நிலையில், அமெரிக்கா தனது சந்தையில் நுழையும் இலங்கைப் பொருட்கள் மீது 30 சதவீத வரியை விதித்துள்ளது. இருப்பினும், இந்த கட்டண விகிதத்தை மேலும் குறைக்க எதிர்வரும் முதலாம் திகதி வரை பேச்சுவார்த்தை நடத்த இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது.
2024 ஆம் ஆண்டில், மூன்று பில்லியன் டொலர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கைக்கு வருமானம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதிக்காக 368.2 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது, இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 27 வீதம் ஆகும். அமெரிக்காவிற்கு இலங்கை அதிகளவான ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.