இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்றிருந்த நிலையில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் புதன்கிழமை (16) நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் சரித் அசலங்க தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய அவிஷ்க பெர்ணாண்டோ, சாமிக கருணாரத்னவை தினேஷ் சந்திமால், கமிந்து மென்டிஸ் பிரதியிட்டிருந்தனர். பங்களாதேஷில் கடந்த போட்டியில் விளையாடிய மெஹிடி ஹஸன் மிராஸை மஹெடி ஹஸன் பிரதியிட்டிருந்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஷொரிஃபுல் இஸ்லாம், மஹெடி ஹஸன் (4), ஷமிம் ஹொஸைன், முஸ்தபிசூர் ரஹ்மானிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. பதும் நிஸங்க 46 (39), தசுன் ஷானக ஆ.இ 35 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 133 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், தன்ஸிட் ஹஸனின் ஆட்டமிழக்காத 73 (47), லிட்டன் தாஸின் 32 (26), தெளஹிட் ஹிரிடோயின் ஆட்டமிழக்காத 27 (25) ஓட்டங்களோடு 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக மஹெடியும், தொடரின் நாயகனாக லிட்டனும் தெரிவாகினர்.