ஜப்பானில் நடைபெற்ற ஆசிய – ஆப்பிரிக்கா – பசுபிக் பவர்லிப்டிங் மற்றும் பென்ச் பிரஸ் சம்பியன்ஷிப்பில் யாழ். சாவக்கச்சேரியை சேர்ந்த சற்குனராஜா புசாந்தன் தேசிய சாதனையை நிலைநாட்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆடவருக்கான 120+ கிலோகிராம் கிளாசிக் திறந்த பிரிவில் போட்டியிட்ட இவர் மொத்தமாக 832.5 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
புசாந்தன் இதற்கு முன்னர் ஆடவருக்கான 120+ கிலோகிராம் திறந்த பிரிவில் தன்வசம் வைத்திருந்த 830 கிலோகிராம் என்ற தேசிய சாதனையை இந்த சம்பியன்ஷிப்பில் முறியடித்துள்ளார்.
குறித்த இந்த ஆசிய – ஆப்பிரிக்கா – பசுபிக் பவர்லிப்டிங் மற்றும் பென்ச் பிரஸ் சம்பியன்ஷிப்பின் கிளாசிக் ஸ்குவாட்டில் 325 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும், பென்ச் பிரஸில் 200 கிலோகிராம் எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தையும், டெட்லிப்டில் 307.5 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருந்தார்.
எனவே ஒட்டுமொத்தமாக 832.5 கிலோகிராம் எடையுடன் தேசிய சாதனையை பதிவுசெய்ததுடன், இந்த சம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கத்தை வெற்றிக்கொண்டார்.
குறித்த இந்த பிரிவில் புசாந்தனுடன் போட்டியிட்ட தாய்வான் நாட்டைச் சேர்ந்த பி.வாங் 965 கிலோகிராம் எடையை தூக்கி தங்கப்பதக்கத்தையும், நியூசிலாந்தைச் சேர்ந்த ஏ. ஹார்ட்மன் 832.5 கிலோகிராம் எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை ஆடவருக்கான 120 கிலோகிராம் எக்கியூப்டட் வகை போட்டிகளில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த யுவிந்து ஜயசிங்க ஸ்குவாட்டில் 300 கிலோகிராம் மற்றும் பென்ச் பிரஸில் 170 கிலோகிராம் எடையை தூக்கி வெண்கலப்பதக்கங்களையும், டெட்லிப்டில் 300 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கதையும் வென்றதுடன், மொத்தமாக 770 கிலோகிராம் எடையுடன் மூன்றாமிடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
அதுமாத்திரமின்றி இதே எடைப்பிரிவில் கிளாசிக் வகை போட்டிகளில் பங்கேற்ற யுவிந்து ஜயசிங்க ஸ்குவாட்டில் 310 கிலோகிராம் எடையை தூக்கி தேசிய சாதனையுடன் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
அத்துடன் பென்ச் பிரஸில் 177.5 கிலோகிராம் மற்றும் டெட்லிப்டில் 295 கிலோகிராம் உட்பட மொத்தமாக 782.5 கிலோகிராம் எடையை தூக்கி நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டார். இவர் தூக்கிய இந்த எடையானது 120 கிலோகிராம் பிரிவில் தேசிய சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.