தாய்வான் தற்போது இராணுவ பயிற்சியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. திடீரென சீனா தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்பதற்கான பயிற்சி ஆண்டு தோறும் ‘ஹான் குவாங்’ என்கிற பெயரில் நடக்கும். அது இந்த ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த பயிற்சியில், தகவல் தொடர்பு சாதனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து போர் பயிற்சி ஒத்திகை நடைபெற்றிருக்கிறது. பெரிய போர் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று துப்பாக்கிசூடு பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
“தாய்வானை சீனாவுடன் இணைப்பதை தவிர்க்க முடியாது” என்று சீன தேசிய பாதுகாப்பு அமைச்சரகம் கூறியிருந்தது. இந்நிலையில் தாய்வான் இன்று தனது பயிற்சியை தீவிரப்படுத்தியிருக்கிறது.
இந்த பயிற்சி குறித்து சீன இராணுவ செய்தி தொடர்பாளர் கேணல் ஜியாங் பிங் கூறுகையில் , “ஹான் குவாங் பயிற்சி தாய்வான் மக்களை ஏமாற்றும் முயற்சி. இதனால் ஒரு தரப்பினருக்கு மட்டுமே நன்மை ஏற்படும்” என்று விமர்சித்திருக்கிறார்.
இந்த ஆண்டு பயிற்சியில், லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த HIMARS ஏவுகணை மற்றும் தாய்வானின் சொந்த தயாரிப்பான ஸ்கை ஸ்வாட் ஏவுகணை முதல்முறையாக பயன்படுத்தப்பட்டன. மேலும், டாங்கிகள் முதல் நீர்மூழ்கி கப்பல்கள் வரை புதிய இராணுவ உபகரணங்களையும் தாய்வான் வாங்கியுள்ளது. இது பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.