உன்னி முகுந்தன் பின்வாங்கினாலும் ‘மார்கோ 2’ உருவாகும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் ‘மார்கோ’ படத்தைச் சுற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்ததால், அதன் அடுத்த பாகங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார் உன்னி முகுந்தன். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. தற்போது ‘மார்கோ’ படத்தின் உரிமைகளை வைத்திருக்கும் க்யூப்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 2-ம் பாகத்தை தொடர்வோம் என்ற ரீதியில் பதிவு வெளியிட்டுள்ளது.
“‘மார்கோ 2’ படத்தை தொடரவேண்டும். அப்படியில்லை என்றால் உரிமையினை வேறொருவரிடம் கொடுத்து, அவரை தொடரச் சொல்ல வேண்டும். அப்படத்தின் அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்” என்று க்யூப்ஸ் நிறுவனத்தை குறிப்பிட்டு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக க்யூப்ஸ் நிறுவனம், “‘மார்கோ’ மீதான அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. அடுத்த பாகங்கள் தொடர்பான விவாதங்கள் இன்னும் முடிவடையவில்லை.
‘மார்கோ’ படத்தின் அனைத்து உரிமைகளும் க்யூப்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. மேலும், ‘மார்கோ’ அடுத்தடுத்த பாகங்களுக்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று உறுதியாக நம்புகிறோம். அதேபோல், இப்படத்தின் உரிமைகளை மாற்றவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ தயாராக இல்லை” என்று தெரிவித்துள்ளது.
உன்னி முகுந்தன் தயாரித்து, நடித்த மலையாளப் படமான ‘மார்கோ’ கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ஹனீப் அதேனி இயக்கிய இந்தப் படம் ரூ.120 கோடியை தாண்டி வசூலித்தது. மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.