கனடாவின் டொரொண்டோ நகரத்தில் உள்ள நார்த் யோர்க் பகுதியில் கடந்த வாரம் கார் மோதி காயமடைந்த 99 வயது மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து ஜூன் 24 ஆம் திகதி மதியம் 1 மணி அளவில், விக்டோரியா பார்க் மற்றும் சன்ரைஸ் அவென்யூ சந்திப்பில், எக்லிண்டன் அவென்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்த நேரத்தில் விக்டோரியா பார்க் சாலையில் வடக்கு திசையில் சென்ற 40 வயதுடைய ஓர் ஆண், சன்ரைஸ் அவென்யூவிற்குள் இடதுபக்கம் திரும்பிய போது தெருவை கடக்க முயன்ற பாதசாரியை மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார் என போலீசார் கூறினர்.
தீவிர காயங்களுடன் பாதிக்கப்பட்ட அந்த முதிய பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், எனினும் ஜூன் 30ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
மூதாட்டி தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. விபத்து நேரத்தில் வாகன ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், இப்போது வரை எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்குத் தொடங்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க முன்னர், பல விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான தகவல்கள் யாருக்கு கிடைத்தாலும், பொலிஸாரை 416-808-1900 என்ற எண்ணில் அல்லது Crime Stoppers இணையதளம் வழியாக தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.