உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இதுவரை முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தை உக்ரைன் கைப்பற்றியுள்ளது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிலையமானது அவ்வப்போது உலக நாடுகளின் ஆயுத விற்பனை, கொள்முதல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்பான புள்ளி விவரங்கள், அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
தற்போது கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ஆயுத இறக்குமதியில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் தொடர்பான விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அது வெளியிட்ட அறிக்கையில் முதலிடத்தில் உள்ள உக்ரைன் தற்போது ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளதால், மற்ற உலக நாடுகளைவிட அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது.
இரண்டாவது இடம் பிடித்துள்ள இந்தியாவின் ஆயுத இறக்குமதியானது, முந்திய ஐந்து ஆண்டு காலத்தைவிட கடந்த 2020 – 2024 வரையிலான காலக்கட்டத்தில் குறைந்துள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது இந்தியா.
மேற்காசிய நாடான கட்டார் மூன்றாவது இடத்திலும் சவுதி அரேபியா நான்காவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தானுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா, எகிப்து, அமெரிக்கா, குவைத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.